search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலையின்மை அதிகரிப்பு"

    வேலையின்மை அதிகரிப்பை ஏற்க மோடி அரசு மறுக்கிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். #Modi #Government #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பல்கலைக்கழக மாணவர்களுடன் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் நேற்று கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசியதாவது:-

    நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு பிரச்சினை கவலை அளிக்கிறது. இதை ஒரு பிரச்சினையாக பிரதமர் நரேந்திர மோடி கருதவில்லை. இதை ஏற்க மோடி அரசு மறுக்கிறது.



    சீனாவுடன் ஒப்பிடும் போது வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது. 24 மணி நேரத்தில் சீனா 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. ஆனால் இந்தியா வெறும் 450 வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கி வருகிறது. இதை நான் சொல்லவில்லை. மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்ற மக்களவையில் அளித்த புள்ளிவிவரம் தான் இது.

    முதலில் நம்முடைய தவறை உணர வேண்டும். அதன் பிறகு அதை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும். இதை தான் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

    ரபேல் விவகாரம், ஊழல், வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து என்னிடம் நேரடியாக விவாதிக்க மோடிக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர் என்னிடம் விவாதிக்க தயாராக இல்லை. நான் மேற்கொண்ட இந்த முயற்சி போல உங்களிடம் மோடி நேரடியாக கலந்துரையாட தயாராக இருப்பாரா? உங்களின் கேள்விகளை எதிர்கொள்ள தயாராக உள்ளாரா? என தெரியவில்லை.

    வேலையின்மை பிரச்சினை குறித்து உங்களிடம் மோடி விவாதிக்க வேண்டும். அவருடைய பார்வையில் பேசுவதை கைவிட்டு, உங்களின் பேச்சை அவர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

    மாணவர்களின் கல்விக்காக மாநில அரசுகள் அதிகம் செலவிட வேண்டும். பட்ஜெட்டில் கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கல்வியை தனியார் மயமாக்குவதற்கு காங்கிரஸ் ஒருபோதும் ஆதரவு அளிக்காது. நாட்டின் வளம் அனைத்தும் ஒரு சிலரின் கைகளில் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக புலவாமா தாக்குதலில் இறந்த துணை ராணுவ படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    ×